Breaking News
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.

காயத்தால் அவதிப்பட்ட டேவிட் வார்னர், ஷான் மார்ஷ் ஆகியோர் உடல் தகுதி பெற்றதால் ஆஸ்திரேலிய ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்தனர். இதனால் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 80.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. டேவிட் மலான் 28 ரன்னுடனும் (64 பந்துகளில் 6 பவுண்டரியுடன்), மொயீன் அலி 13 ரன்னுடனும் (31 பந்துகளில் ஒரு சிக்சருடன்) களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று துவங்கியது. டேவிட் மலான் மேற்கொண்டு 28 ரன்கள் அடித்த நிலையில், 56 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 38 ரன்களில் வெளியேறினார். பின் வரிசை வீரர்கள் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை தாரைவார்க்க 116.4 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 302 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்திலேயே நிலை தடுமாறியது. 7 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 5 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த கேம்ரன் பன்கிராப்ட், பிராடு பந்தில் வெளியேறினார். டேவிட் வார்னர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
உஸ்மான் காவ்ஜா 11 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளை வரை 24 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் ஸ்மித் 19 ரன்களுடனும் பீட்டர் ஹண்ட்ஸ்கோம்ப் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியை விட ஆஸ்திரேலிய அணி 226 ரன்கள் பின் தங்கியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.