ஆர்கே நகரில் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு தராத உள்ளூர் அதிகாரிகள்!
ஆர்.கே.நகரில், பறக்கும் படையில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள், வாகன சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தராததால், பாதுகாப்பிற்கு வந்துள்ள, துணை ராணுவ வீரர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
சென்னை, ஆர்.கே.நகரில், 21ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அதனால், வாக்காளர்களுக்கு, பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் வினியோகம் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக, தொகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளில், தேர்தல் கமிஷன், சோதனை சாவடிகள் அமைத்துள்ளது. ஒவ்வொரு சாவடியிலும், மாநகராட்சி அதிகாரி, இரண்டு – மூன்று துணை ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசார் அடங்கிய, தேர்தல் பறக்கும் படையினர் உள்ளனர்.
அவர்கள், அந்த வழியாக செல்லும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை இடைமறித்து, சோதனை செய்கின்றனர். சோதனை சாவடியில், சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை, பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும். குறிப்பாக, தி.மு.க., – அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் என, யார் வந்தாலும், அவர்களை கீழே இறக்கி, வாகனத்தை முழு சோதனை செய்ய வேண்டும்.
ஆனால், பறக்கும் படையில் உள்ள மாநகாரட்சி மற்றும் உள்ளூர் போலீசார், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை, சரியாக சோதனை செய்வதில்லை. அவ்வழியே செல்லும், வாகன எண்களை மட்டும் குறித்து கொள்கின்றனர். குறிப்பாக, முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வந்தால், சோதனை செய்வது போல செய்து, ‘மத்திய படைக்காக தான் சோதனை செய்கிறோம்’ என்று, அவர்களிடமே கூறுகின்றனர்.