Breaking News
கோவா மாநில 10-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நேரு படத்தை நீக்கி சவர்க்கர் படம்

கோவா 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஜவஹர்லால் நேருவின் படம் நீக்கப்பட்டு, பதிலாக ஆர்.எஸ்.எஸ். இணை நிறுவனரும் சுதந்திரப் போராட்ட வீரருமான விநாயக சவர்க்கர் படம் சேர்க்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் பேரவை குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக பாடப்புத்தகத்தின் 68வது பக்கத்தில் மகாராஷ்டிரம் வார்தாவில் உள்ள சேவாகிரம் ஆசிரமத்தில் 1935-ம் ஆண்டு நேரு, மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத் ஆகியோர் சேர்ந்து அமர்ந்திருக்கும் படமே இருந்தது.

நேருவின் 2 புகைப்படங்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன ஆனால் தற்போது 2 படங்களும் நீக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் மாணவர் கிளைத் தலைவர் அராஸ் முல்லா கூறும்போது, பாடப்புத்தகத்தில் விநாயக் சவர்க்கர் ஒரு புரட்சியாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், “இன்று நேரு படத்தை நீக்குவார்கள், நாளை மகாத்மா காந்தி படத்தையே நீக்குவார்கள். 60 ஆண்டுகாலம் காங்கிரஸ் என்ன செய்தது என்றும் பேசுவார்கள், எழுதுவார்கள். வரலாற்றை மாற்ற அவர்கள் முயல வேண்டாம்” என்கிறார் காட்டமாக.

இந்த விவகாரம் கோவா மாநில கல்வித்துறை இயக்குநர் கஜானன் பட் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, “உயர்கல்வித்துறை சேர்மனிடம் நேரு புகைப்படம் நீக்கப்பட்டதற்கான விளக்கங்களைக் கேட்டுள்ளோம்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.