இன்று முழு சந்திர கிரகணம்; பிர்லா கோளரங்கில் மக்கள் பார்க்கலாம்
இன்று நள்ளிரவு முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. அதை பொதுமக்கள் பார்வையிட பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சந்திரனில் இருந்து சூரியன் உள்ள திசையில் புவி அமை யும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. புவியின் நிழலில் சந்திரன் முழுமையாக நுழைந்து
சென்றால் அது முழு சந்திர கிர கணம் என அழைக்கப்படுகிறது. புவியின் நிழலில் சந்திரன் இருந் தாலும், புவியின் வளி மண்டலத்தில் பட்டு சிதறடிக்கப்பட்ட பின், எஞ்சிய செந்நிற ஒளி சந்திரன் மீது படியும். அப்போது சந்திரன் செந்நிறமாக தோற்றமளிக்கும்.
102 நிமிடங்கள்
இந்திய நேரப்படி, இன்று இரவு 11.53 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், 28-ம் தேதி அதிகாலை 3.49 மணி வரை நீடிக்கும். முழு கிரகணம் 28-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு தொடங்கி, அதிகபட்ச கிரகணம் 1.52 மணிக்கு நிகழும். 2.43 மணிக்கு முடியும். முழு சந்திர கிரகணம் 102 நிமிடங்கள் நிகழவுள்ளது. இதுபோன்ற நீண்ட நேர முழு சந்திர கிரகணம், இனி 2029-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தான் நிகழும்.
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம். பொதுமக்கள் நேரடியாகவும், தொலை நோக்கி மூலமாகவும் பார்க்க, சென்னை காந்தி மண்டபம் சாலையில் உள்ள பி.எம்.பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிக அருகில் செவ்வாய் கிரகம் சூரியனுக்கு நேர் எதிரே, அதாவது 180 டிகிரி கோணத்தில் ஒரு கோள் வரும்போது அந்தக் கோள் எதிரமைவு கொண்டுள்ளது எனப்படும். இந்த நேரத்தில் அந்த கோள் பூமிக்கு மிக அருகில் அமைந்திருக்கும். எனவே பெரிதாகவும், மிகுந்த ஒளியுடனும் காணப்படும். இது சூரியன் மறையும்போது உதயமாகி, இரவு முழுவதும் வானில் காணப்படும்.
அவ்வாறு, ஒரு எதிரமைவு நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. அப்போது செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் சுமார் 5.76 கோடி கிமீ தூரத்தில் வரும்.
இந்த நிகழ்வை பிர்லா கோளரங்கில் 31-ம் தேதி வரை இரவு 7 முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.