டாஸ்மாக் மதுபான கடைகள், பார்களில் கண்காணிப்பு கேமரா தமிழக அரசு பரிசீலிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும், பார்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து 4 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், சமூக நீதிக்கான வக்கீல்கள் அமைப்பின் தலைவர் கே.பாலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சட்டவிரோதம்
தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 181 மதுபானக் கடைகள், 3 ஆயிரத்து 76 பார்கள் டாஸ்மாக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கடைகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகிறது. சட்டவிரோதமாக மதுபானங்கள், தரமற்ற உணவுகள் இங்குள்ள பார்களில் விற்பனை செய்யப்படுகின்றனர். இங்கு மது அருந்த வருபவர்கள் மிகக்குறைந்த வயதை உடையவர்களாக உள்ளனர். குறிப்பாக பள்ளிச்செல்லும் மாணவர்கள் இங்கு மது அருந்துகின்றனர்.
மதுபான கடைகளுக்கு முன்பு 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படாது என்று டாஸ்மாக் நிறுவனம் விளம்பர பலகைகள் வைத்திருந்தாலும், அங்கு சிறுவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கண்காணிப்பு கேமரா
எனவே, மதுபான கடைகள், பார்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டால், இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க முடியும். அன்றாட நிர்வாகத்துக்கும் இது உதவியாக இருக்கும். இதுகுறித்து கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிறுவனத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும், அங்குள்ள பார்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், என்னுடைய கோரிக்கை மனுவை பரிசீலிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பரிசீலிக்கவேண்டும்
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், மனுதாரரின் கோரிக்கையை 4 மாதத்துக்குள் பரிசீலித்து தகுந்த முடிவினை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நன்றி : தினத்தந்தி