மையமும் மாநிலங்களும் அமெரிக்காவும் இந்தியாவும்
அமெரிக்க அதிபருக்கான அதிகாரங்கள் வானளாவியவை
இந்திய வரலாற்றைப் படித்தவர்களுக்கு இந்திய அரசுச் சட்டம் 1935 வருவதற்கு முன்னால் இந்தியா முழுவதற்கும் ஒரே அரசுதான் இருந்தது (சமஸ்தானங்களைத் தவிர) என்பதும் பிரெசிடென்ஸிகள் (ராஜதானிகள்) என்று அழைக்கப்பட்ட மாநில நிர்வாகங்களுக்கு அதிக அதிகாரங்கள் இல்லை என்பதும் தெரியும். 1937-ல் நடந்த தேர்தல்களுக்குப் பிறகுதான் மாநிலங்களுக்குத் தனியாக, பொருட்படுத்தக் கூடிய, அதிகாரங்கள் கிடைத்தன. முப்பதுகளில் மாநிலங்களுக்கு இன்னும் அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும்; மத்திய அரசின் கையில் அவை குவியக் கூடாது என்று நினைத்தவர்கள் பலர் இருந்தனர். ஆனால் 1940-களில் தொடங்கிய பிரிவினைவாதமும் அதன் விளைவாகப் பாகிஸ்தான் உருவானதும், இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமானால் வலுவான மத்திய அரசு அவசியம் என்ற நிலைப்பாட்டை நமது தலைவர்களை எடுக்க வைத்தன. உதாரணமாக, “மத்தியில் அமைக்கப்படும் அரசு 1935 இந்திய அரசுச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசை விட வலுவானதாக இருக்க வேண்டும்” என்று அம்பேத்கர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா பிறந்த விதம்
அமெரிக்கா பிறந்த விதம் வேறானது. 1776-க்கு முன்னால் அங்கு 13 காலனிகள் இருந்தன. அனைத்தும் பிரித்தானிய அரசின் கீழ் இயங்கின. அதிகாரங்கள் அனைத்தும் பிரித்தானிய நாடாளுமன்றத்திடமும் அரசரிடமும் இருந்தன. விடுதலைக்காக ஒன்றாக இயங்கினாலும், அமெரிக்கக் காலனிகளுக்குத் தனி அடையாளம் இருந்தது. அந்த அடையாளத்தை விட்டுக்கொடுக்க பின்னால் மாநிலங்களாக மாறியபோது அவை தயாராக இல்லை. இதை அமெரிக்க அரசியல் சட்டத்தை அமைத்தவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். எனவேதான் அமெரிக்க அரசியல் சட்டம் மாநிலங்களுக்குக் கூடுதலான அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறது. அமெரிக்காவில் ‘ரெசிடுவல் பவர்ஸ்’(residual powers) என்று அழைக்கப்படும் வரையறுக்கப்படாத அதிகாரங்கள் மாநிலங்கள் கைகளிலும் மக்கள் கைகளிலும் இருக்கின்றன. இந்தியாவில் இந்த அதிகாரத்தை நமது அரசியல் சட்டம் இந்திய நாடாளுமன்றத்திற்கு வழங்கியிருக்கிறது.
சுருக்கமாகக் கூற வேண்டுமானால் அமெரிக்கா அழிக்க முடியாத மையத்தையும், அழிக்க முடியாத மாநிலங்களையும் கொண்ட குடியரசு. மாறாக இந்தியக் குடியரசு அழிக்க முடியாத மத்திய அரசையும், அழியக் கூடிய மாநிலங்களையும் கொண்ட குடியரசு. சுதந்திரத்திற்குப் பின் நாம் எத்தனை மாநிலங்களாகப் பிரிந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டால் நான் சொல்வது தெளிவாக விளங்கும். அமெரிக்காவில் மாநிலங்கள் சேரலாம். ஆனால் மாநிலங்கள் இரண்டு மூன்றாகப் பிரிவது அரிதாகவே நடந்திருக்கிறது. அவ்வாறு பிரிவதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் நடைமுறையில் அதிகச் சாத்தியம் இல்லாதது.
மையத்தை விட்டுப் பிரிதல்
ட்ரம்ப் வெற்றி பெற்றதும் கலிபோர்னியா பிரிந்து தனிநாடாகப் போக வேண்டும் என்று சில குரல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. சிலர் அமெரிக்காவிலிருந்து பிரிந்து போவதையே அரசியல் சட்டம் அனுமதித்திருக்கிறது என்று வாதிடுகிறார்கள். 1860-களில் தெற்கு மாநிலங்கள் பிரிந்து போவதாக அறிவித்ததால் உள்நாட்டுப் போர் மூண்டது. நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த வட மாநிலத்தவர் ஆபிரகாம் லிங்கன் தலைமையில் போரிட்டு வெற்றி பெற்றனர். இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா இதுவரை நடத்திய போர்களிலேயே கடுமையான உயிர்ச்சேதம் உள்நாட்டுப் போரில்தான். சுமார் 7.5 லட்சம் பேர்கள் இறந்தனர். இரண்டாம் உலகப் போரில் கூட நான்கு லட்சம் அமெரிக்கர்கள்தான் இறந்தனர். எனவே பிரிவினையால் ஏற்படும் நன்மைகளை விட அழிவுகள்தான் அதிகம் ஏற்படும் என்பதை அமெரிக்க மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.
குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களும் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களும் இரண்டு தனி அரசுகளாக எந்த வன்முறையும் இல்லாமல் பிரியலாம் என்று சிலர் சொல்கிறார்கள். இது முட்டாள்தனமான வாதம். ஏனென்றால் ஏறத்தாழ எல்லா மாநிலங்களிலும் குடியரசுக் கட்சியை ஆதரிப்பவர்களும் ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பவர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். பிரிவினை இருவருக்கும் கேடு விளைவிக்கும். ட்ரம்பை நான்கு ஆண்டுகள் பொறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
ட்ரம்ப் பெறப்போகும் அதிகாரங்கள்
அமெரிக்க அதிபரின் அதிகாரங்கள் நமது குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் இருக்கும் அதிகாரங்களை விட அதிகம் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். இவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம். முதலாவதாக, அவர் முப்படைகளுக்கும் தலைவர். நமது குடியரசுத் தலைவரைப் போல பொம்மைத் தலைவர் அல்ல. உண்மையான தலைவர். நேரடியாக அவரால் ஆணையிட முடியும். உதாரணமாக ட்ரம்ப் ஈரான் மீது அணு ஆயுதத்தைச் செலுத்த நினைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ், செனட், இராணுவம், மக்கள் எல்லோருமே இருந்தாலும், அவர் நினைத்ததை விரும்பினால் செயலாற்ற முடியும். அவரை எதிர்க்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பின்னால் அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம். ஆனால் நடந்ததை மாற்ற முடியாது.
இரண்டாவதாக, உலகிலேயே ஒற்றர்கள் அதிகம் உள்ள நாடு அமெரிக்கா. 16 உளவு நிறுவனங்கள் 80 பில்லியன் டாலர்கள் செலவிட்டு உலகத்தைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றன. இவர்கள் அனவருக்கும் தலைவர் அமெரிக்க அதிபர். இந்த அதிகாரம் உலகையே ஆட்டிப் படைக்கும் அதிகாரம் என்று சொல்லத் தேவையில்லை. மூன்றாவதாக பல துறைகளுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்யும் அதிகாரமும் அவரிடம் இருக்கிறது. குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் விரும்பியவரைத் தேர்ந்தெடுக்கலாம். நான்காவதாக, மிக முக்கியமாக, எந்த சட்டமும் அவரது ஒப்புதலுடன்தான் சட்டமாக முடியும். அவர் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று சொன்னால் காங்கிரசில் இரண்டில் மூன்று பங்கு ஓட்டு மூலமாகத்தான் அதிபரின் மறுப்பை எதிர்த்துச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்.
உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரு தனிமனிதனுக்கு இந்த அளவிற்கு அதிகாரம் இல்லை. ட்ரம்ப் கையில் இவை குவிந்திருக்கும் என்ற எண்ணமே உலகில் பல தலைவர்களுக்குத் தூக்கத்தில் பயங்கரக் கனவுகளை வரவழைக்கிறது.
– பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com