சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி கிளப்பிய கோவா மாணவர்கள்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்ல விமானம் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக கோவாவை சேர்ந்த தீபக் (வயது 22) உள்பட 5 கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்.
இவர்கள் சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏற செல்லும் 7 அடுக்கு பாதுகாப்பு சோதனையில் இறுதிக்கட்ட சோதனையை செய்தனர்.
அப்போது எங்களை ஏன் சோதனை செய்கிறீர்கள்? எங்களது உடைமைகளில் தான் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் என்று கூறினர்.
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அடிக்கடி சோதனை செய்ததால் விளையாட்டாக வெடிகுண்டு இருப்பதாக கூறினோம் என தெரிவித்தனர். இதையடுத்து 5 மாணவர்களையும், விமான நிறுவன அதிகாரிகள், விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு இருப்பதாக மாணவர்கள் கிளப்பிய பீதியால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.