தமிழகத்தை புகழும் கேரள இளைஞர்: வைரல் வீடியோ
பாலக்காடு: மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் நிதி மற்றும் நிவாரண உதவிகளை அள்ளி கொடுத்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்தும், தமிழர்களை புகழ்ந்தும் , பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
நிவாரண பொருட்கள்
அந்த வீடியோவில் ஸ்ரீஜித் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் வணக்கம், என் தமிழில் பிரச்னை இருந்தால் மன்னித்து விடுங்கள். நான் ஸ்ரீஜித்,பாலக்காடு, கேரளா.தமிழ்நாட்டு ஆளுங்கள் எனக்கூறினால், நிறைய பேர் முன்னர் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். படிப்பறிவு குறைவு என இங்கு தவறாக நினைப்பார்கள்.2 நாள் வெள்ள நிவாரண முகாமில் தான் இருந்தோம். இப்போதும் கூட இரு சக்கர வாகனத்தில் இருந்து பெரிய பெரிய லாரிகளில் இருந்தும் டன் கணக்கில் நிவாரண பொருட்கள் வந்து கொண்டுள்ளன. உண்மையை சொல்ல வேண்டுமானால், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்னையின் போது, உங்களின் பலத்தை காட்டினீர்கள். இப்போது, எங்களுக்கு உங்களின் மனசோட அன்பை காட்டினீர்கள்.
மனதில் இருக்கும்
இப்போதும் கூட பொருட்கள் வந்து கொண்டுள்ளன. நிறைய லோடு லோடாக வருகின்றன. இதற்கு பின்னர் எந்த அமைப்பு உள்ளது. யார் இருந்தார்கள் என தெரியாது. இருந்தாலும், யாராவது ஒருவர் ஒரு ரூபாய் கொடுத்திருந்தாலும், அவர்கள் செய்தது, இங்குள்ளவர்களின் மனதில் இருக்கும். இப்போது வெள்ளம் வடிந்துவிட்டது. வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறோம். பிரச்னை ஏதும் இல்லை. சரியாகி வருகிறது. தமிழர்கள் காட்டிய அன்புக்கு நன்றி.எப்படி சொல்வது என எனக்கே தெரியவில்லை. 2 நாள் நிவாரண முகாமில் இருந்த எனக்கே இப்படியென்றால், மற்றவர்களுக்கு நன்றாக தெரியும். தமிழகத்திற்கு ஏதாவது பிரச்னை என்றால் நாங்கள் வந்து நிற்போம்.
அன்புக்கு நன்றி
பாலக்காட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அந்தவழியாக தான், எல்லா பகுதிகளுக்கும் பொருட்கள் செல்கின்றன. அதனை நாங்கள் பார்க்கிறோம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொருட்கள் செல்கின்றன. நீங்கள் செய்த அன்புக்கு நன்றி. உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்த வீடியோ பரபரப்பாக பரவி வருகிறது.