மு.க.அழகிரியின் பேரணியை முறியடிக்க ஸ்டாலின் தீவிரம்: மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து காலியாக உள்ள திமுக தலைவர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கடந்த 2017 ஜனவரி 4-ம் தேதி முதல் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கருணா நிதியின் மகனுமான மு.க.அழகிரி கட்சித் தலைமையை கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டாலினுக்கு எதிராக அவ் வப்போது கருத்துகளை தெரிவித்து வந்தாலும் அரசியலில் இருந்து அழகிரி ஒதுங்கியே இருந்தார்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு அழகிரியை கட்சியில் இணைக்க குடும்பத்தினர் முயற்சித்தனர். அதற்கு ஸ்டாலின் மறுத்து விட்ட தாகக் கூறப்படுகிறது. கடந்த 13-ம் தேதி கருணாநிதி நினை விடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவில் அறிவிப்பேன்’” என்றார். ஸ்டாலினுக்கு போட்டி இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் அழகிரியின் இந்த கலகக்குரல் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது பலத்தை நிரூபிப்பதற்காக வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் பேரணி நடத்த அழகிரி முடிவு செய்துள் ளார். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இதற்காக திமுக தலைமை நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், மாவட் டச் செயலாளர்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்களுடன் அழகிரி தொடர்ந்து பேசி ஆதரவு திரட்டி வருகிறார். ஸ்டாலினால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அதிருப்தியில் இருப்பவர்களை அழகிரியின் பக்கம் இழுக்க அவரது ஆதரவாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் பலர் அழகிரி நடத்தும் பேரணி யில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் களை தொடர்புகொண்டு, ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் ஒருவர் கூறும்போது, “சென்னையில் அழகிரி நடத்தும் பேரணி யில் திமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்கக் கூடாது. அதிருப்தியில் உள்ள கட்சியினரை அரவணைத்துச் செல்ல வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். திருவாரூர், திருப்பரங் குன்றம் இடைத்தேர்தல் மட்டுமல்லாது மக்களவைத் தேர்தலும் வருவதால் கட்சி உடையாமல் பலமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் யாருக்கும் பலனில்லாமல் போய்விடும் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்டச் செயலாளர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் பேசி வருகின்றனர். அழகிரியின் பேரணியை முறியடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்” என்றார்.