அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு நெருக்கடி
டிரம்புக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டு இருந்தபோது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீது பல்வேறு பெண்கள், பாலியல் புகார்களை எழுப்பினர்.
குறிப்பாக ஆபாச பட நடிகை டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்கள், தங்களுடன் டிரம்ப் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை பகிரங்கப்படுத்தப்போவதாக மிரட்டியதாக தெரிகிறது. இந்த விவகாரம் வெளியே வந்தால் அது ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் சூழல் உருவானது. அப்போது அவர்களுக்கு டிரம்பின் வக்கீல் மைக்கேல் கோஹன் (வயது 51) பணம் தந்து அவர்களின் வாயை அடைத்தார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் நிதி தொடர்பான சட்டத்தை மீறி செயல்பட்டதாக மைக்கேல் கோஹன் மீது புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கு, நீதிபதி வில்லியம் பவுலே முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மைக்கேல் கோஹன் சட்டத்தை மீறி செயல்பட்டது தொடர்பாக தன்மீது கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அப்போது அவர், ‘‘ஜனாதிபதி தேர்தலின்போது, வேட்பாளராக போட்டியிட்டவர், தங்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை வெளியே பகிரங்கப்படுத்திவிடுவோம் என்று சொன்ன 2 பெண்களின் வாய்களை அடைப்பதற்காக அவர்களுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.1 கோடியே 96 லட்சம்) கொடுத்தேன். வேட்பாளரின் உத்தரவின்பேரில், ஜனாதிபதி தேர்தலின்போது தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் நான் இதைச் செய்தேன்’’ என கூறினார்.
இங்கே வேட்பாளர் என அவர் கூறியது டிரம்பைத்தான். அவர் பணம் தந்ததாக கூறியது ஆபாச பட நடிகை டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்களுக்குத்தான். மேலும் இது தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டு உள்ள 8 குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
மைக்கேல் கோஹன் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு உள்ள நிலையில், அவர் மீதான தண்டனை விவரத்தை நீதிபதி வில்லியம் பவுலே டிசம்பர் மாதம் 12–ந் தேதி அறிவிப்பார்.
கோர்ட்டில் மைக்கேல் கோஹன் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதுடன், டிரம்ப் சொல்லித்தான் அதைச் செய்தேன் என கூறி இருப்பது டிரம்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே டிரம்பின் முன்னாள் பிரசார குழு தலைவர் மானபோர்ட் (69) மீது தொடரப்பட்டு உள்ள வழக்கில் வரி மோசடி, வங்கி மோசடி, வெளிநாட்டு வங்கி கணக்கை மறைத்த மோசடி உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்து உள்ளது. தண்டனை விவரம்தான் அறிவிக்க வேண்டி உள்ளது.
இப்படி ஒரே நேரத்தில் தனது முன்னாள் பிரசார குழு தலைவரும், முன்னாள் வக்கீலும் வழக்குகளில் சிக்கி இருப்பது டிரம்புக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
மைக்கேல் கோஹன் கோர்ட்டில் தன்னைப்பற்றி கூறியது பற்றி டிரம்ப் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையும் எதுவும் குறிப்பிடவில்லை.
டிரம்ப் மீது மைக்கேல் கோஹன் குற்றம்சாட்டி உள்ள நிலையில், அவர் ஜனாதிபதி என்பதால் விலக்குரிமை உண்டு என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே டிரம்ப் மீது வழக்கு போட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
ஆனால், டிரம்ப் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் டிரம்பின் குடியரசு கட்சிக்கே பெரும்பான்மை பலம் உள்ளது. நவம்பர் மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி வெற்றி பெற்று, இரு சபைகளிலும் பெரும்பான்மை பலம் பெற்றால், டிரம்புக்கு அது மேலும் தலைவலியை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து, இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் பதவி நீக்கம் செய்யப்பட்டது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.