கேரள வெள்ள நிவாரண நிதியாக இந்திய விமான படையானது ரூ.20 கோடி வழங்குகிறது
கேரளாவில், வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 10–க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 324 பேர் உயிரிழந்ததாகவும், 1,500க்கும் அதிகமான முகாம்களில் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கை பேரழிவை கருத்தில் கொண்டு தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருக்கிறது.
கேரளாவில் வெள்ள பாதிப்பினை அடுத்து மழைநீர் வடிய தொடங்கிய நிலையில், அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரண நிதி குவிந்து வருகிறது.
கேரள மக்களுக்கு அரிசி, பால் பவுடர், ஆடைகள், போர்வைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கேரளாவில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிவாரண நிதியாக இந்திய விமான படையானது ரூ.20 கோடி நிதி உதவி வழங்குகிறது.
இதனை இந்திய விமான படையின் தென்மண்டல தளபதி பி. சுரேஷ் முதல் அமைச்சர் பினராயி விஜயனிடம் அவரது அலுவலகத்தில் இன்று காலை வழங்குகிறார்.