துபாயில் பஸ், மெட்ரோ போக்குவரத்தை மொபைல் போனில் துல்லியமாக கண்காணித்து பயணிக்கும் வசதி !
துபை போக்குவரத்துக் துறை அறிமுகப்படுத்தியுள்ள ‘ஒஜ்ஹத்தி’ ( Wojhati app ) எனும் புதிய ஆப் மூலம் நமது ஆண்ட்ராய்ட் போனிலிருந்தே ‘அந்த சமயத்தில் சாலையில் இயங்கிக் கொண்டுள்ள’ பஸ் மற்றும் மெட்ரோ வருகையை கண்காணித்து அதற்கேற்றவாறு நமது பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். இந்த செயலி இன்டர்நெட் இணைப்பு இல்லாத நிலையிலும் இயங்கும்.
இந்த செயலியை இயக்குவது மிக எளிது. செயலியை திறந்து உங்களுக்கு எந்தத் திசையிலிருந்து வரும் பஸ் அல்லது மெட்ரோ குறித்த விபரங்கள் வேண்டுமோ அந்தத் திசையை நோக்கி காட்டினால் போதுமானது, உங்கள் ஆண்ட்ராய்ட் போனிலுள்ள காமிரா இயங்கி அந்த சாலையில் அந்த சமயத்தில் இயங்கிக் கொண்டுள்ள பஸ்கள், மெட்ரோ குறித்த விபரங்கள் மற்றும் அவை நாம் இருக்குமிடம் வந்தடையும் நேரத்தையும் கண்காணித்து தகவல் தரும்.
Be In Be Out (BiBo) திட்டம்:
இந்த புதிய BiBo திட்டத்தின் மூலம் நாம் அன்றாட பஸ், மெட்ரோ போக்குவரத்திற்கு பயன்படுத்தும் NOL கார்டுகளை உள்ளே நுழையும் போதும், வெளியேறும் போதும் தேய்க்க வேண்டிய அவசியமில்லை, பயணிக்கும் போது உங்களுடைய பாக்கெட் அல்லது பர்ஸில் இருந்தால் போதும் அதுவே தானாக தேவையான கட்டணத்தை வெட்டிக் கொள்ளும். இந்த நடைமுறை உலகின் ஓரிரு நாடுகளில் மட்டுமே உள்ளது விரைவில் துபையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மகானி (எனும் முகவரி கண்டறியும்) திட்டம்:
இந்தத் திட்டத்தின் மூலம் துபையின் அனைத்து கட்டிடங்களும் ஒரு புதிய மகானி எனும் தொழிற்நுட்பத்தின் வழியாக ஒருங்கிணைக்கப்படும். உங்களால் துபையில் ஒரு முகவரியை கண்டுபிடிக்க இயலாவிட்டால் உங்களுடைய நண்பரோ, உறவினரோ வசிக்கும் கட்டிடத்தின் மகானி குறியீடை கேட்டுப் பெற்று நீங்கள் பயணிக்கும் ஜிபிஎஸ் சிஸ்டம் பொருத்தியுள்ள டேக்ஸியின் டிரைவரிடம் கொடுத்தால் அவர் டேக்ஸியில் பொருத்தப்பட்டுள்ள சிஸ்டத்தில் பதிந்து மகானி திட்டத்தின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நீங்கள் சென்று சேர வேண்டிய சரியான கட்டிடத்தின் வாசலில் இறக்கி விடுவார் என்றும் இதற்கான பயிற்சிகள் தற்போது டேக்ஸி டிரைவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், 2017 ஆண்டில் துபையில் இயங்கும் 50 சதவிகித டேக்ஸிக்கள் இத்தகைய மகானி சேவையை வழங்கும் என்றும் துபை போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.