தி.மு.க.தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு
தி.மு.க.தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிக்கபட்டார். தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
பதிவு: ஆகஸ்ட் 28, 2018 10:40 AM
சென்னை,
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக மு.க ஸ்டாலின் முறைப்படி அறிவிக்கப்படுகிறார்.
அதேபோல், திமுக பொருளாளராக துரை முருகன் இன்று அறிவிக்கப்படுகிறார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். அண்ணா அறிவாலயம் வளாகத்திலும் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
பொதுக்குழு கூட்டம் துவங்கியதும், மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதையடுத்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா மற்றும், முன்னாள் ஐநா பொதுச்செயலாளர் கோபி அன்னான் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க.தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவித்தார். இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.