பாஸ்போர்ட்டை தொலைத்தால் அபராதம் விதிக்கப்படும்- மலேசிய அரசு அதிரடி
பாஸ்போர்ட்டை தொலைவப்பவர்களுக்கு இனி அபராதம் விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோல் பணிபுரிந்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மக்களும் அங்கு சுற்றுலாவுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் அங்கு செல்லும் வெளிநாட்டினர் தங்களின் பாஸ்போர்ட்டை தொலைப்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பது தொடர்பாக அந்நாட்டு துணை பிரதமர் தலைமையில், குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மலேசியாவில் பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களுக்கு இதுவரை அபராதம் விதித்ததில்லை என்றனர். ஆனால் இனி பாஸ்போர்ட்டை தொலைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் தங்களின் பாஸ்போர்ட்டை பொறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். மலேசியாவில் முதன் முறையாக அடையாள அட்டை காணாமல் போனால் 100 ரிங்கிட் அபராதமும் இரண்டாவது முறை காணாமல் போனால் 300 ரிங்கிட்டும் மூன்றாவது முறை தொலைத்தால் 1000 ரிங்கிட்டும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதே போன்ற அபராதம் இனி பாஸ்போர்ட் தொலைப்பவர்களுக்கும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 44, 528 பாஸ்போர்ட்கள் தொலைந்துபோனதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.