எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.
மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழலில் கருணாஸ் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான் தலைமறைவாகவில்லை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தான் இருக்கிறேன் என தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு கருணாஸ் எம்.எல் ஏ பேட்டி அளித்துள்ளார்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தனது பேச்சு பற்றி கருணாஸ் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நான் பேசிய 47 நிமிட வீடியோ யூட்யூபில் உள்ளது. முழுவதையும் கேட்டால் நான் தவறாக பேசியதாக சொல்லமாட்டீர்கள் பத்திரிக்கை விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.
செப்.16 ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் தவறுதலாக பேசியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்.
தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்? ஜனாதிபதியை நான் தேர்ந்து எடுத்தேன் என சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா அவரை தேர்ந்து எடுக்க நானும் ஓட்டளித்து உள்ளேன். அதுபோல் தான் முதல் அமைச்சரையும் என கூறினார்