சபரிமலை அய்யப்பன் கோவிலில் பாதுகாப்பு பணியில் 500 பெண் போலீசார்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி முதல் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு சிறப்பாக மேற்கொள்ளும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் முதற்கட்டமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண் போலீசார் 500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 500 பெண் போலீசார் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து பெண் போலீசாரை வரவழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.
இக்கோவிலில் முதல் முறையாக பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.