நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலர் கைது
டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தில், நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே, இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குர்கானில் உள்ள ஆர்கடியா மார்க்கெட் அருகே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலரின் பெயர் மகிபால் என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய கையோடு, அருகாமையில் உள்ள சதார் போலீஸ் நிலையத்திற்கு மகிபால் சென்றுள்ளார். போலீசார் பிடிக்க முற்படவே, துப்பாக்கியால் சுட்ட படி, தப்பி ஓடியுள்ளார். சிறிது நேரத்தில், மகிபாலை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடுக்கான பின்னணி காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நீதிபதியின் குடும்பத்தினர் , பாதுகாவலர் மகிபாலை மிகவும் மோசமாக நடத்தியதால், ஏற்பட்ட விரக்தியில் துப்பாக்கியால் சுட்டதாக வாக்குமூலம் அளித்தாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.