சபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக உள்ளது : தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை அமல்படுத்துவோம் என கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது. கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். யாரும் தடுத்து நிறுத்தப்படமாட்டார்கள் என்று அறிவித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மற்றும் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வதை அனுமதிக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தியவர்கள் கூறினார்கள்.இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. வருகிற 22-ந்தேதி வரை நடை திறந்திருக்கும்.
இதனால் முதல் நாளே 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அதிக அளவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நேற்று அதிகாலையில் இருந்தே சபரிமலைக்கு செல்லும் மலை அடிவாரமான நிலக்கல்லுக்கு இளம் பெண்கள் பல்வேறு வாகனங்களில் வரத் தொடங்கினர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் பம்பை மற்றும் சபரிமலை செல்லும் மலைப்பாதை நுழைவிடங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். சபரிமலைக்கு வரமுயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர். இதனால், சில இடங்களில் தள்ளுமுள்ளு, தடியடி என அப்பகுதி பரபரப்பாக காட்சி அளித்தது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டிவிட பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்கிறது என கேரள மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் போராட்டத்தை கைவிட தயரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் தேவசம் போர்டு செல்லவில்லை என்றும் சபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருப்பதாகவும், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.