அமிர்தசரஸ் அருகே ரெயில்கள் மோதி 61 பேர் பலி: ரயில் விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர் விளக்கம்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்னும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ரெயில் தண்டவாள பகுதியையொட்டிய மைதானத்தில் தசரா விழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவை நூற்றுக்கணக்கானோர் ரெயில் தண்டவாளத்தின் மீது ஏறி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு சென்று கொண்டிருந்த ஜலந்தர் எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தின் மீது நின்றிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதேபோல் எதிர்திசையில் வந்த இன்னொரு ரெயிலும் பலர் மீது மோதியது. இதில் 60 பேர் பலியாகினர். 70-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. இவர்களில் 39 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் தசரா விழா நடந்தபோது ராவணனாக நடித்த நாடக நடிகர் தல்பீர் சிங் என்ற இளைஞரும் உயிரிழந்தார். இந்த நிலையில், ரெயில் விபத்துக்கு காரணம் ரெயில்வே அல்ல என்று ரெயில்வே வாரியத்தின் தலைவர் அஸ்வினி லொகானி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் நேற்று உத்தரவிட்டார். விசாரணை 4 வாரங்களில் முடிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
ரயில் தண்டவாள பகுதியில் ஏராளமானோர் நிற்பதைப் பார்த்ததும் அவசரமாக பிரேக்கை இயக்கியதுடன் வேகமாக ஹாரனும் அடித்தேன். எனினும் சிலர் அடிபட்டதும் அங்கிருந்தோர் ரயில் மீது கல்வீசி தாக்கத் தொடங்கியதால் பயணிகளை பாதுகாக்க ரயிலை தொடர்ந்து இயக்க நேரிட்டது
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.