Breaking News
அமெரிக்கா ஆதரவின்றி பத்திரிகையாளர் கசோகி கொலை நடந்திருக்காது; ஈரான் அதிபர் ருஹானி

எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். அவர் தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கசோகி கொல்லப்பட்டார். இதை முதலில் சவுதி அரேபியா மறுத்து வந்தது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் பின்னர் கடந்த சனிக்கிழமை சவுதி அரேபியா அரசு ஒப்புக் கொண்டது. எனினும் அதை சண்டையில் ஏற்பட்ட மரணம் என்று மட்டுமே தெரிவித்தது. பின்னர்தான் சவுதியிலிருந்து அனுப்பட்ட குழு அவரை கொன்றது என தெரிய வந்தது.

இதனை வரலாற்றில் மறைத்த மிக மோசம் நிறைந்த சம்பவம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இச்சம்பவம் சவுதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கொலை நடந்த நாடான துருக்கியின் அதிபரும் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தொலைக்காட்சி ஒன்றில் இன்று பேசும்பொழுது, அமெரிக்கா நாட்டின் ஆதரவின்றி இதுபோன்ற செயலை துணிவுடன் எந்த நாடும் செய்திருக்கும் என நான் நினைக்கவில்லை என கூறினார்.

சவூதி அரேபியாவை ஆளும் பழங்குடி குழுவானது பாதுகாப்பு எல்லையை கொண்டது. இந்த பாதுகாப்பு எல்லையானது அமெரிக்க ஆதரவை சார்ந்தது. அமெரிக்காவே அவர்களுக்கு ஆதரவு தரும் சூப்பர் பவராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தங்களது ஆதிக்கத்தினை நிலைநிறுத்த சன்னி பிரிவு முஸ்லிம்களை கொண்ட அரேபிய அரசும், ஷியா பிரிவு முஸ்லிம்களை கொண்ட ஈரான் நாடும் நீண்ட காலம் ஆக போராடி வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.