Breaking News
அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்புபடுத்தப்பட்ட பெண் மீது ‘சூப்’ கடைக்காரர் பரபரப்பு புகார்

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் தகவல் பரவியது. அந்த பெண்ணிடம் அமைச்சர் ஜெயக்குமார் செல்போனில் பேசுவது போன்ற உரையாடலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ‘அது தன்னுடைய குரல் அல்ல. ‘மார்பிங்’ செய்யப்பட்டிருக்கிறது.’ என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

நெருக்கம்

இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்பு படுத்தப்பட்ட பெண் சிந்து மீது சென்னை வியாசர்பாடி முல்லை காம்ப்ளக்ஸ் 19-வது பிளாக்கில் வசிக்கும் பி.சந்தோஷ்குமார்(வயது 26) என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னை எம்.கே.பி.நகர் போலீஸ்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் மண்ணடி புது தெருவில் ‘சூப்’ கடை நடத்தி வருகிறேன். என்னுடைய கடைக்கு பிராட்வே பிரபாத் குடியிருப்பில் வசித்தும் வரும் சிந்து என்ற பெண் தினமும் வருவார். 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவருக்கும், எனக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.

அவர் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நானும் சிந்துவும் நெருக்கமாக பழகி வந்தோம்.

ரூ.3½ லட்சம், 10 பவுன் நகை

கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் திடீரென்று சிந்து என் வீட்டுக்கு வந்தார். என்னிடம், ‘எனது அம்மாவுக்கு இதயக் கோளாறு இருக்கிறது. உடனே ஆபரேசன் செய்ய வேண்டும். அதற்கு ரூ.5 லட்சம் வரை செலவு ஆகும்’ என்று கூறி அழுதார்.

நான் என் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.3½ லட்சம் மற்றும் 10 பவுன் தங்கநகைகளை கொடுத்தேன். அதன்பிறகு பலமுறை சிந்துவை அழைத்தபோது, எனது போனை எடுக்கவில்லை. இது தொடர்ச்சியாக நடந்ததால், நான் அவருடைய வீட்டுக்கு சென்ற போது, சிந்துவும், அவரது தாயார் சாந்தியும், மேலும் 2 பேர் இருந்தனர்.

நான் சிந்துவை அழைத்த போது, ‘அவருடைய தாயார் என்னை அவமானப்படுத்தினார். சிந்துவை தவறான உறவுக்கு அழைத்தாய் என்று போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன்’ என்றும் மிரட்டினார்.

விசாரணை

என்னை ஆட்களை வைத்து மிரட்டிய சாந்தி மற்றும் அவரது மகள் சிந்து மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்னிடம் இருந்து பறித்துக் கொண்ட ரூ.3½ லட்சம் பணம் மற்றும் 10 பவுன் தங்கநகைகளை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த புகார் மனுவை இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி பெற்றுக்கொண்டு, விசாரணை நடத்தி வருகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.