Breaking News
11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கின் மீதான விசாரணையை ஒத்தி வைக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 25-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இந்த மனுக்களின் மீது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல் பாலாஜி சீனிவாசன் நேற்று ஆஜராகி தங்கள் தரப்பில் மேலும் சில விவரங்களும் ஆவணங்களும் தயார் செய்ய அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அதனால் இந்த வழக்கின் மீதான விசாரணையை அக்டோபர் 30-ந் தேதி(இன்று) விசாரிக்காமல் மேலும் சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு தி.மு.க. தரப்பிலும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அப்போது, ஏற்கனவே பட்டியலிட்டபடி 30-ந் தேதி (இன்று) வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு, அது குறித்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவெடுக் கப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.