ஆப்கானிஸ்தானில் சுங்கச்சாவடியில் தலீபான்கள் தாக்குதல் 7 போலீசார் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.
அங்கு சமீப காலமாக தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாத நாள் இல்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பராக் மாகாணத்தின் தலைநகரான பராக் நகரில் தெக்யாக் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிலை குலைந்து போயினர். அவர்களால் சுதாரித்து எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் போய் விட்டது.
இந்த தாக்குதலில் 7 போலீசார் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தலீபான் பயங்கரவாதிகள் அள்ளிச்சென்று விட்டனர்.
இந்த தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என தலீபான் பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், 7 போலீசாரை கொன்று அந்த சுங்கச்சாவடியை தாங்கள் கைப்பற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.