பழநியில் தைப்பூச கொடியேற்றம் : 9ம் தேதி தேரோட்டம்
பழநி: பழநி கோயிலில் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 9ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். திருவிழாவிற்கு ஜனவரி மாத துவக்கத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்கி விட்டனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழா இன்று காலை 10 மணிக்கு மீன லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தையொட்டி விநாயகர், வள்ளிதெய்வானை சமேதரரான முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வளர்பிறை நிலவு, சூரியன், சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது.
விழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளிதெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் 9ம் தேதி நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கத்தில் பக்திச் சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், கிராமிய நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.