ஓட்டு போடாதவர்களுக்கு, அரசாங்கத்தை கேள்வி கேட்கும் உரிமை கிடையாது சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு
ஓட்டு போடாதவர்களுக்கு அரசாங்கத்தை கேள்வி கேட்கும் உரிமை கிடையாது என சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கூறி உள்ளது.
ஓட்டு போடாதவர்களுக்கு அரசாங்கத்தை கேள்வி கேட்கும் உரிமை கிடையாது என சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கூறி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
நாடு முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அனைவருக்கும் பொதுவாக உத்தரவிடக் கோரி டெல்லியை சேர்ந்த ‘இந்தியாவின் குரல்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
‘ஓட்டு போட்டது இல்லை’
வழக்கு தொடுத்துள்ள தொண்டு அமைப்பின் சார்பில் தனேஷ் இயேஷ்தன் ஆஜராகி வாதாடினார்.
அவரிடம் நீதிபதிகள், ‘‘நீங்கள் ஓட்டு போட்டது உண்டா, இல்லையா?’’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘‘என் வாழ்நாளில் நான் ஓட்டு போட்டது இல்லை என்பதை நேர்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்’’ என பதில் அளித்தார்.
நீதிபதிகள் கண்டிப்பு
அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த நீதிபதிகள், ‘‘நீங்கள் ஓட்டு போட்டது இல்லை என்றால், அரசாங்கத்தை கேள்வி கேட்கவோ அல்லது குற்றம் சாட்டவோ உங்களுக்கு உரிமை கிடையாது’’ என கண்டிப்புடன் கூறினர்.
தொடர்ந்து நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது, ‘‘ஆக்கிரமிப்புகளை ஒட்டுமொத்தமாக அகற்றுமாறு உத்தரவிடுவதற்கு எங்களுக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது. நாங்கள் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், அவதூறு வழக்குகளும், பிற வழக்குகளும் வந்து குவியும். எனவே உத்தரவு பிறப்பிப்பது சாத்தியம் அல்ல’’ என கூறினர்.
அத்துடன், ‘‘நீங்கள் ஐகோர்ட்டுகளை நாடவில்லையென்றால், நீங்கள் இங்கு விளம்பரத்துக்காகத்தான் வழக்கு தொடுத்திருக்கிறீர்கள் என்று நாங்கள் கருதுகிறோம்’’ எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அனுமதி
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், வழக்கு தொடுத்த தன்னார்வ தொண்டு அமைப்பு, சம்மந்தப்பட்ட ஐகோர்ட்டுகளை அணுகி, பரிகாரம் தேடிக்கொள்வதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்து வழக்கை முடித்தனர்.
நன்றி : தினத்தந்தி