இடைத்தரகர் தீபக் தல்வாருக்கு மல்லையாவுடன் தொடர்பு
‘ஹெலிகாப்டர் மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, இடைத் தரகர் தீபக் தல்வாருக்கு, தொழிலதிபர் விஜய் மல்லையாவுடன் தொடர்பு உள்ளது’ என, அமலாக்கத் துறை கூறியுள்ளது.
வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த மோசடி தொடர்பாக, இடைத்தரகர், தீபக் தல்வார், சமீபத்தில், வளைகுடா நாடான, ஐக்கிய அரசு எமிரேட்சில் இருந்து நாடு கடத்தி வரப்பட்டார். அவரிடம், அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. காவல் நீட்டிப்புக்காக, டில்லியில் உள்ள, பண மோசடி சட்ட சிறப்பு நீதிமன்றத்தில், தல்வார், நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அமலாக்கத் துறை கூறியதாவது: பல்வேறு விமான நிறுவனங்களின் இடைத் தரகராக, தல்வார் ஈடுபட்டுள்ளார். ‘அந்த வகையில், ‘கிங்பிஷர்’ விமான நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த, விஜய் மல்லையாவுடன், இவருக்கு தொடர்பு உள்ளது. விசாரணையின்போது, இது குறித்து, தல்வார் சில தகவல்களை கூறியுள்ளார்.
மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. வெளிநாட்டில் உள்ள மகனுடன், வரும், 11ல், தீபக் தல்வாரை பேச வைக்க உள்ளோம். இது விசாரணைக்கு உதவும். அதனால் காவலை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அமலாக்கத் துறை கூறியது. இதையடுத்து, 12ம் தேதி, தீபக் தல்வாரை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்தது.