பாகிஸ்தானுடன் உறவை துண்டிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்க ஐ.சி.சி. மறுப்பு
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் உள்ள புலவாமாவில் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது.
இதனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்று முன்னாள் கேப்டன்கள் அசாருதீன், கங்குலி, மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர்.
இது குறித்து ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து உரிய நேரத்தில் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்று அறிவித்தது. அதே சமயம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் பாகிஸ்தானின் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரவளிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகள் எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
துபாயில் 6 நாட்களாக நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் எழுதிய கடிதம் குறித்து நேற்று முன்தினம் சிறிது நேரம் விவாதிக்கப்பட்டது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
“கிரிக்கெட் விளையாடும் நாடுகள் மற்ற நாடுகளுடன் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது துண்டிப்பதோ என்பது எங்களது வரம்பில் இல்லை. கிரிக்கெட் விளையாடாமல் ஒரு நாட்டை ஒதுக்குவது என்பது அரசாங்க ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு. இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது.” என்று ஐ.சி.சி. தெளிவுப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் 48 வயதான அனில் கும்பிளே மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே 2012-ம் ஆண்டில் இந்த பொறுப்பில் இருந்த கும்பிளே, அடுத்த 3 ஆண்டுகள் மறுபடியும் இந்த பணியை கவனிப்பார். கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், கிரிக்கெட்டில் விதிகளை மாற்றுவதிலும் இந்த கமிட்டி தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.