‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி 7-வது வெற்றியை தனதாக்கியது.
இதில் ரஹானேவின் (105 ரன்) சதத்தின் உதவியுடன் ராஜஸ்தான் நிர்ணயித்த 192 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு எட்டிப்பிடித்தது. ரிஷாப் பான்ட் 36 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதுடன், ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
வெற்றிக்கு பிறகு டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘உள்ளூரை காட்டிலும் வெளியூர் சென்று விளையாடும் போதுதான் , எங்களுக்கு ஆடுகளம் நன்றாக அமைகிறது. பவர்-பிளேயில் சிறந்த தொடக்கம் கிடைப்பது முக்கியம். அந்த பணியை ஷிகர் தவான் செய்தார். உள்ளூர் ஆடுகளத்தின் தன்மையை எங்களால் இன்னும் கணிக்க முடியவில்லை. இருப்பினும் எங்கள் அணி சரியான பாதையில் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற ரிஷாப் பான்ட் அளித்த பேட்டியில், ‘முக்கியமான ஆட்டத்தில் வெற்றிக்கு உதவியது உற்சாகம் அளிக்கிறது. உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது எனக்கு வருத்தம் அளிக்கவில்லை என்று பொய் சொல்லமாட்டேன். ஆனாலும் தற்போது எது தேவையோ அதில் தான் முழு கவனமும் செலுத்துகிறேன். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது. அதனை நான் சரியாக பயன்படுத்தி கொண்டேன். ஆட்டம் முடிந்ததும் சவுரவ் கங்குலி என்னை தூக்கி வைத்து கொண்டாடியது, சிறப்பு வாய்ந்த அனுபவமாகும்’ என்றார்.
ரிஷாப் பான்டுக்கு டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் கிடைக்காததால் ரிஷாப் பான்ட் எந்த அளவுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளார் என்பது எனக்கு தெரியும். என்னை பொறுத்தமட்டில் இந்திய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படாதது தவறான முடிவாகும். இங்கிலாந்து சீதோஷ்ண நிலையில் மிடில் வரிசையில் சுழற்பந்து வீச்சை அவர் அடித்து நொறுக்கக்கூடியவர். உலக கோப்பை போட்டியில் அவர் ஆடுவதை பார்க்க நாங்கள் ஆர்வமாக இருந்தோம். இந்த நேரத்தில் அவருக்கு அணியில் இடம் கிடைக்காவிட்டாலும், அவரிடம் இருக்கும் திறமைக்கு அவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் 3 அல்லது 4 உலக கோப்பை தொடரில் விளையாடுவார். அவர் வேற்று கிரகவாசி போல் விளையாடுவதாக நினைக்கிறேன். அதிகபட்ச திறமையுடன் காணப்படும் அவர் உண்மையான போட்டியாளர், வெற்றியாளர். அவர் இந்த போட்டி தொடரில் முன்னேற்றம் கண்டு வருவது நல்ல அறிகுறியாகும்’ என்றார்.