பெங்களூரு அணியின் வெற்றி நீடிக்குமா? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த 2 ஆட்டங்களில் (கொல்கத்தா மற்றும் சென்னைக்கு எதிராக) தொடர்ச்சியாக நூலிழை வித்தியாசங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களில் ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டிய நெருக்கடியுடன் விளையாடி வரும் பெங்களூரு அணிக்கு உள்ளூரில் ஆடுவது சற்று சாதகமான விஷயமாகும். அது மட்டுமின்றி இந்த சீசனில் ஏற்கனவே பஞ்சாப் அணியை அவர்களது இடத்தில் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதால் பெங்களூரு அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
பஞ்சாப் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் (31 சிக்சருடன் 421 ரன்) நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக சோபிக்காததால் தான் கடந்த 4 ஆட்டங்களில் 3-ல் அந்த அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. பந்து வீச்சில் வலுவாக உள்ள நிலையில் பேட்ஸ்மேன்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பஞ்சாப் அணி, அபாயகரமான அணியாக உருவெடுத்து விடும். பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.