ஓரளவுக்குதான் பொறுமை காப்பேன்: சசிகலா காட்டம்
ஓரளவுக்குதான் பொறுமை காப்பேன். அதற்கு மேல் அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் என சசிகலா கூறினார்.
இது தொடர்பாக இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் கட்சியினர் மத்தியில் சசிகலா கூறியதாவது:
”ஜெயலலிதா தற்போதும் நம் மத்தியில் இருக்கிறார். அவர் கட்சியில் உள்ள புல்லுருவிகளை அடையாளம் காட்டுகிறார்.
அதிமுக ஒரு எஃகு கோட்டை. அதை யாரும் அசைக்க முடியாது.ஜெயலலிதாவும் நிறையப் போராட்டங்களைச் சந்தித்துத்தான் கட்சியை நடத்தினார். நமக்கும் தற்போது சோதனை வந்திருக்கிறது. அதை வென்று காட்டுவோம்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்குதான் பொறுமை காப்பேன். அதற்கு மேல் அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம்.
எனக்கு எல்லாமே தொண்டர்கள்தான். பிரித்தாள நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள். தொண்டர்கள் இருக்கும் வரை எதற்கும் அஞ்சப் போவதில்லை.
அதிமுகவை வழிநடத்தக் கூடிய பொறுப்பும், கடமையும் எனக்கு உள்ளது.ஜெயலலிதாவின் துணை இருக்கும்போது ஒருசிலரால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது” என்று சசிகலா கூறினார்.
மைத்ரேயன் எம்.பி. கண்டனம்
சென்னையில் பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் மைத்ரேயன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், ”சசிகலா மிரட்டும் தொனியில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.