கோவா IFFI 2016- கிராஜுவேஷன்: சிக்கல்மிகு களம்!
| கோவா – சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை. |
GRADUATION | CRISTIAN MUNGIU | ROMANIA
குழந்தைகளுக்கு ஒழுக்க நெறிகளையும், எப்படியெல்லாம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்களே அதிலிருந்து தவறினால் என்னவாகும்?
சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் இதுதான் நிகழ்கின்றன. குழந்தைகளுக்கு அறத்தைப் பற்றி போதிக்கும் நாம்தான் அறமில்லாமல் நடந்து கொள்கிறோம். அதனைப் பார்த்து வளரும் குழந்தைகள் என்ன மாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வளவு நுட்பமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு, அதனை மிக சுவாரசியமாக ‘கிராஜுவேஷன்’ திரைப்படத்தில் நமது பார்வைக்குத் தந்துள்ளார் கிறிஸ்டியன் முங்கியு.
ருமேனியாவின் வடமேற்கு பகுதியில் வசிக்கும் ரோமியோ, அப்பகுதியின் மிக முக்கியமான மருத்துவர். 18 வயதான அவரது மகள் எலிசா தனது பள்ளிப் படிப்பை அந்த ஆண்டோடு முடிக்க இருக்கிறாள். அதன்பின் பிரிட்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் அவளுக்கு உதவித்தொகையுடன் படிப்பைத் தர தயாராக இருக்கின்றன. ஆனால், அவளது இறுதித் தேர்வின் போது எதிர்பாராதவிதமாக தாக்குதலுக்கு ஆளாகிறாள். அதன் பின் அவளால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை. அவளது மதிப்பெண்களை அதிகப்படுத்த பல்வேறு வழிகளை மேற்கொள்கிறார் ரோமியா. எலிசா பள்ளி படிப்பைப் முடித்து பெரிய பல்கலைக்கழகங்களுக்கு சென்றாளா? அவளைத் தாக்கியது யார்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் போக்கில் மேற்சொன்ன நுட்பமான விசயத்தை பேசுகிறார் இயக்குநர்.
ஆரம்பக் காட்சியிலேயே ரோமியோ, எலிசாவிடம் அவளது படிப்பு குறித்துதான் பேசுகிறார். அவரது கதாபாத்திரத்தை ஒரு கண்டிப்பான அப்பாவாக நம்முன் நிறுத்துகிறது அக்காட்சி. அனால், எலிசாவிற்கோ வெளிநாட்டிற்கு சென்று படிக்க ஆசையில்லை. இந்த முரண்பாடே கதையை நகர்த்திச் செல்லும் மையம். இதனூடேதான் படத்தின் திரைக்கதை பயணிக்கிறது.
பள்ளிக்கு அருகில் எலிசாவை இறக்கி விட்டு செல்லும் ரோமியோ நேராக தனது மாற்றுக் காதலியின் வீட்டுக்கு செல்கிறார். மகளிடம் அவ்வளவு கண்டிப்பாக பேசும் அப்பாவின் முகம் அங்கே உடைபடுகிறது.
மகள் யாராலோ தாக்கப்பட்டாள் என்று தெரிந்ததும், அவளைத் தாக்கியவனைக் கண்டுபிடிக்க தனது அதிகாரத்தை முழுக்க பயன்படுத்துகிறார். காவல்துறையில் அவரது நண்பரைக் கொண்டு அந்தக் குற்றாவாளியைத் தேட தூண்டுகிறார். அதேபோல மகளின் மதிபெண்களை அதிகப்படுத்த நிறைய பேரை சந்திக்கிறார். ஏறக்குறைய அதுவும் ஊழலுக்கு சமானமான ஒன்றுதான். ஆனால், தனது மகளின் நன்மைக்காக இதனை செய்தாக வேண்டும் என ஒவ்வொரு கதாபாத்திரத்திடமும் கூறிக் கொண்டே இருக்கிறார். உண்மையில் எலிசாவிற்கு நிறைய மதிப்பெண் எடுத்து வெளிநாடு செல்ல துளியும் ஆசையில்லை. இப்படியாக நம்மை சலிப்படைய வைக்காமல் கதையானது நகர்ந்து கொண்டே இருக்கிறது.
ரோமியோவின் மாற்றுக் காதல் எலிசாவிற்கு தெரிந்தபின், பாத்ரூமில் ரோமியோவும் எலிசாவும் பேசிக்கொள்ளும் காட்சி ஒட்டுமொத்த பட்த்தின் சாரம்சத்தை சொல்கிறது.
“அம்மாவுக்கு துரோகம் செய்யாதீங்க” என எலிசா கூற, “இது எனக்கும் உனது அம்மாவுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட விசயம் இதில் நீ தலையிடாதே” என ரோமியோ கூற, அவர்களுக்கிடையேயான உரையாடல் இப்படி செல்கிறது.
மகளுக்கு அவ்வளவு ஒழுக்க நெறிகளை சொன்ன அப்பாவிடம் அதே ஒழுக்க நெறியைப் பற்றி கேட்டால் தனது தனிப்பட்ட விசயம் என்கிறார். அப்படியென்றால், மகளை வெளிநாட்டிற்கு அனுப்பி அப்படி என்ன படிக்க வைக்க போகிறார் என கேள்வி நம்மில் எழாமல் இல்லை.
அதேபோல மகளின் மதிப்பெண்களை உயர்த்த ரோமியோ மேற்கொள்ளும் வழிகள் அவைகளும் ஒழுக்க நெறிகளுக்கு எதிரானவையே. இப்படி எல்லாவற்றிலும் மாறாக இருந்து கொண்டு மகளை ஒழுக்கமாக இருக்க சொல்லும் அப்பாக்கள் அதிகமாகவே இருக்கின்றனர்.
இந்த மாதிரியான சமூக சிக்கல்களை சுவராசியமான கதைக்களமாக மாற்றிய இயக்குநருக்கு பாராட்டுகள் சொல்ல வேண்டும். எந்த இடத்திலும் போரடிக்கவே இல்லை. நான் ஏற்கெனவே சொன்னது ஏகப்பட்ட கேள்விகளை நம்மிடையே தோன்ற வைப்பது இதன் சிறப்பு. அதேபோல அப்பா – மகள் இருவருக்கும் இடையேயான முரண்பாடுகளையும் அழகாக பேசியிருக்கிறது. சமூக சிக்கல்களை நுட்பமாக பேசியதில் ‘கிராஜுவேஷன்’ மிக சுவராசியமான திரை அனுபவம்.
இத்திரைப்படம் 2016 கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றது.