Breaking News
தென்ஆப்பிரிக்க 20 ஓவர் தொடரில் டோனியை ஓரங்கட்ட திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் 38 வயதான டோனி, இளம் வீரர்களுக்கு வழிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் டோனி தனது எதிர்காலம் குறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கிறார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) இந்தியாவுக்கு வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. 20 ஓவர் ஆட்டங்கள் தர்மசாலா (செப்.15), மொகாலி (செப்.18), பெங்களூரு (செப்.22) ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 20 ஓவர் தொடருக்கான இந்திய அணி வருகிற 4-ந்தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அந்த தொடரில் ஆடிய வீரர்களை அப்படியே தொடர வைக்க தேர்வு குழுவினர் விரும்புவதாகவும், இதனால் தென்ஆப்பிரிக்க தொடரில் டோனிக்கு இடம் கிடைக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி 22 இருபது ஓவர் ஆட்டங்களில் மட்டுமே விளையாட உள்ளது. அதனால் உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் அணியை தேர்வு செய்வதில் தேர்வு குழுவினர் தெளிவாக உள்ளனர். குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிக்காக மூன்று விக்கெட் கீப்பர்களை தயார்படுத்த தேர்வு குழு திட்டமிட்டுள்ளது.

டோனி என்ன மனநிலையில் இருக்கிறார்? அவரது எதிர்காலம் திட்டம் என்ன? என்பதை அறிய இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் அவரிடம் பேசுவார்களா? என்பது தெளிவாக தெரியவில்லை. ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு. இந்த விஷயத்தில் தேர்வாளர்களோ அல்லது வேறு யாரோ தலையிட்டு முடிவு எடுக்க உரிமை இல்லை. அதே சமயம் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு திட்டங்கள் வகுப்பதற்குரிய எல்லா உரிமையும் தேர்வு குழுவுக்கு இருக்கிறது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்டுக்கே அதிகமான வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன் மாற்று விக்கெட் கீப்பர்கள் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் பெயர் பரிசீலிக்கப்படும்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.