சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு
சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத் துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெய லலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஒத்திவைப்பு
இந்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 7-ந் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
இன்று தீர்ப்பு
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வு கடந்த 6-ந் தேதி அறிவித்தது.
அதன்படி, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது. காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு கூறுகிறார்கள்.
சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு உறுதி செய்யப்படுமா? அல்லது அந்த தீர்ப்பு ரத்து ஆகுமா? என்பது இன்று காலை தெரியும்.
புதிய முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ந் தேதி ராஜினாமா செய்தார். அன்றைய தினம் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்- அமைச்சராக சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சசிகலா புதிய முதல்-அமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்பட்டது.
நாடு முழுவதும் எதிர்பார்ப்பு
பின்னர் கவர்னர் வித்யா சாகர் ராவை சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். சசிகலா தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதால் தனது அரசு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், தனக்கு மெஜாரிட்டி ஆதரவு உள்ளது என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இருதரப்பினரும் ஆட்சிக்கு உரிமை கோரியதால் கவர்னர் வித்யாசாகர் ராவ் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு விரைவில் வர இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னருக்கு தயக்கம் இருந்தது.
இந்த நிலையில் இன்று வெளியாகும் தீர்ப்பு தமிழக அரசியலை தீர்மானிக்கும் என்பதால் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி : தினத்தந்தி