இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்-அப் செயலி திடீர் முடக்கம்: கோடிக்கணக்கான வலைத்தளவாசிகள் தவிப்பு
சமூக வலைத்தளங்களில் முக்கியமான செயலியாக இருப்பது வாட்ஸ்-அப் ஆகும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த செயலி மூலம் தகவல்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் படங்களை தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பதிவிட்டு வருகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் இந்த செயலி முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது. வர்த்தக ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.உலகின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயலியாக இது உள்ளது.
இந்த நிலையில் வாட்ஸ்-அப் செயலி நேற்று மாலை 4.15 மணி முதல் சில மணி நேரம் திடீரென முடங்கியது. வாட்ஸ்-அப் செயலி மூலம் படங்கள், வீடீயோக்களை எதையும் பகிர முடியாத நிலையும், பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான வலைத்தளவாசிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
இந்தியா, பிரேசில், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாட்ஸ்-அப் சேவை முடங்கியது. இதனை குறிக்கும் வகையில் “வாட்ஸ்-அப் டவுன்” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரண்டானது. திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் வாட்ஸ்-அப் செயலி முடக்கம் பற்றி அந்நிறுவனம் தகவல் எதையும் வெளியிடவில்லை.