Breaking News
6வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 6வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்கான நாளாக யோகா தினம் அமைந்துள்ளது. அனைவரும் குடும்பத்துடன் வீட்டிலிருந்தே யோகா செய்யுங்கள். யோகாவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளுங்கள். யோகா நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குடும்ப வன்முறையை ஒழிக்கும். கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை யோகா கூட்டுகிறது. சுய ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை யோகா வளர்க்கும்.

யோகாவின் தேவையை தற்போது உலகம் உணர்ந்துள்ளது. நமது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால், அது நோய்க்கு எதிராக போராட உதவுகிறது. நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் வகையில் யோகா நடைமுறைகள் உள்ளன.

யோகா ஒரு ஆரோக்கியமான உலகத்துக்கான நமது தேடலை மேம்படுத்துகிறது. இது ஒற்றுமைக்கான சக்தியாக உருவெடுத்து மனிதகுலத்தின் பிணைப்பை ஆழப்படுத்துகிறது. இது பாகுபாடு காட்டாது, இது இனம், நிறம், பாலினம், நம்பிக்கை மற்றும் வம்சாவளியைத் கடந்தது.

கொரோனா வைரஸ் நமது சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது. இதற்கு ‘பிரணாயாமம்’ என்ற ஒரு சுவாசப் பயிற்சி செய்வதன் மூலம், நமது சுவாச மண்டலத்தை வலிமையாக்குவதற்கு நமக்கு மிகவும் உதவுகிறது” என்று கூறினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு யோகா தின பயிற்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.