‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கமிஷன் வாங்கி பல கோடி மோசடி- நடவடிக்கை எடுக்கப்போவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்தும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கமிஷன் வாங்கி பல கோடி மோசடி- நடவடிக்கை எடுக்கப்போவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
சென்னை கொளத்தூரில் மழை-வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது.
ஏற்கனவே “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இதில் கமிஷன் வாங்கி உள்ளனர். பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
“ஸ்மார்ட் சிட்டி” திட்ட பணிகள் முடிந்த பிறகு இதில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். இதில் ஸ்மார்ட் சிட்டி காண்டிராக்ட் எடுத்தவர்கள் மீதும் நிச்சயமாக நடவடிக்கை பாயும்.
எஸ்.பி. வேலுமணி
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதுவும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.