
தூத்துக்குடியில் மது போதையில் பெற்ற தாயை கொடூரமாக குத்திக்கொலை செய்த மகன் கைது
தூத்துக்குடியில் மது போதையில் தாயை மூன்று இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஞானதீபம் இவரது மனைவி
புலோடில்லடா. இவர்களுக்கு ஸ்டாலின்,ராஜா, ஜெயன், ஜான்சி என 4 பிள்ளைகள் உள்ளனர். புலோடில்லடா தனது கணவரை விட்டு பிரிந்து இரண்டாவது மகன் ராஜாவுடன் வசித்து வருகிறார். மூன்றாவது மகனான ஜெயின் இரவு நேர பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார். ஜெயன் தனது தாய் வீட்டிற்கு சென்று அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில், நேற்றிரவு தாய் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் மகன் ஜெயன் பெற்ற தாய் என்றும் பாராமல் கத்தியால் மார்பு மற்றும் வயிற்று பகுதி ஆகிய மூன்று இடங்களில் கொடூரமாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாயை கொலை செய்த ஜெயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் பெற்ற தாயை மது போதையில் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது