
தூத்துக்குடியில், நாய் குரைத்ததால் தகராறு – பைக் எரிப்பு – வாலிபர் கைது
தூத்துக்குடியில் நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் மோட்டார் பைக்கை எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி பூபாலராயபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ரமேஷ் (23). இவர் வீட்டு வாசலில் நாயை கட்டி வைத்திருந்தாராம். அப்போது தூத்துக்குடி பேட்ரிக் சர்ச் தெருவை சேர்ந்த செல்லையா மகன் ராசையா என்ற கலாம் (23) அந்த வழியாக பைக்கில் சென்றபோது நாய் அவரைப் பார்த்து குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் கம்பால் நாயை தாக்கினாராம். இதைப்பார்த்த ரமேஷ் அவரை கண்டித்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கலாம், ரமேஷ் வீட்டுக்கு சென்று அவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக்கை சேதப்படுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாராம் இதில் பைக் சேதம் அடைந்தது. இதுகுறித்து ரமேஷ் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து ராசையா என்ற கலாமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.