பலாத்காரம் செய்தவரைக் காதலிப்பதாக கூறிய பெண்: குஜராத் உயர் நீதிமன்றம் திகைப்பு
குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பலாத்கார வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண் பலாத்காரம் செய்தவரைத் தான் காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
காதலிப்பதோடு அவருடைய குழந்தையை பெற்றெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்து நீதிபதியை திகைக்க வைத்தார்.
இந்தப் பெண் இவ்வாறு கூறியதையடுத்து ஆனந்த் மாவட்டத்தில் அந்தப் பெண்ணை ‘காதலிப்பதாக’ கூறிய நபர் வீட்டுக்கு அழைத்துச் சென்று சேர்ப்பிக்குமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது.
மேலும், குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுப்பதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் மஹிசாகர் மாவட்ட சமூகநல அதிகாரிக்கும், குழந்தையின் உடல் நலத்தை அக்கறையுடன் கவனிக்குமாறு அரசு மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணை நீதிபதி ஜே.பி.பர்திவாலா கோர்ட்டுக்கு அழைத்தார். அப்போதுதான் அவர் தன்னைப் பலாத்காரம் செய்தவருடன் தனக்கு உறவு இருப்பதாகவும் தான் அவரை காதலிப்பதாகவும், அதனால் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவதாகவும் கூறினார். குற்றம்சாட்டப்பட்டவரையும் கோர்ட் அழைத்தது அவரும் பெண்ணையும், குழந்தையையும் பாதுகாப்பேன் என்று உறுதி அளித்தார்.
இவர் காதலிப்பதாக கூறிய அந்த நபர் கடத்தல் மற்றும் பலாத்கார குற்றச்சாட்டில் சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முதலில் தனது கருவை கலைக்கவே அந்தப் பெண் விரும்பியுள்ளார். 24 வார கருவை கலைக்க சட்டத்தில் இடமில்லை என்று மறுக்கப்பட்டது.
ஆனால் மகளின் நிலையை சமூகம் என்னவாக பார்க்கும் என்று இந்தப் பெண்ணின் தாயார் விசனப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை விட சமூகத்தின் மீது தான் பெண்ணின் தாய்க்கு கவலையதிகமாக இருந்துள்ளது என்று நீதிபதியே கூறியுள்ளார்
நன்றி : தி இந்து தமிழ்