எடப்பாடி பழனிசாமி நாளை வரை முதல் -அமைச்சாராக இருப்பாரா என்பதே கேள்விக்குறி – பா.ஜனதா
பீளமேட்டில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தற்போதைய அரசியல் சூழலில் கவர்னர் ஆழமாக யோசித்து முடிவு எடுத்துள்ளார். தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பம் முடிவுக்கு கொண்டு வருமா? என்பது நாளை தான் தெரியும். எடப்பாடி பழனிசாமி நாளை வரை முதல் – அமைச்சர் பதவியில் இருப்பாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாளை வரை அவர் பதவியில் தொடர இறைவன் தான் அருள் புரிய வேண்டும்.
இரு கழகங்களும் தமிழகத்தை அழித்து விட்டது. ஊழலும் அதிகரித்து விட்டது. தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றில்லாமல் அதிகாரத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர். ஆரம்பித்து, ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க. கட்சி இன்று முடிந்து விட்டது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி, ரவுடி ஆட்சியை கொண்டு வர வேண்டாம். நேற்றைய முதல் -அமைச்சர் பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் காவல்துறை மட்டும் தான் இருந்தது. காவலர்கள் இல்லை. தற்போது பதவி ஏற்றுள்ள முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் 100 சதவீதம் தமிழகம் இருக்காது.
கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் அசாதாரண சூழலில் தி.மு.க. தவிர்த்து வேறு யாரேனும் தி.மு.க. ஆட்சி வர வேண்டும் என்று சொல்லவில்லை. கழகங்கள் இல்லா தமிழகம், கவலைகள் இல்லா தமிழர்கள் என்ற இலக்குடன் பாரதீய ஜனதா செயல்படும். என் துறையின் கீழ் 1 லட்சம் கோடிக்கான திட்டம் சொல்லப்பட்டு நடை முறைப்படுத்தவில்லை. பிரதமர் தர தயாராக இருந்தும் வாங்க தமிழகத்தில் தயாராக இல்லை என்று கூறினார் பொன் ராதாகிருஷ்ணன்.
நன்றி : தினத்தந்தி