மார்ச் 11-ல் கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா
இந்திய-இலங்கை மக்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 11, 12 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்ள 4,880 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.
ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோனியார் தேவாலயம் 1913-ம் ஆண்டு நிறுவப்பட்டது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர் களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் எடுக்கவும், மீன் பிடிக்கவும் பயன்படுத்தினர்.
இந் நிலையில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கச்சத் தீவை இலங்கைக்கு 8.7.1974 அன்று எழுதிக் கொடுத்தார். அப்போது ஏற்பட்ட ஒப்பந்தப்படி அங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா மார்ச் 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெயரத்தினம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கத்திற்கு அனுப்பிய அழைப்பை ஏற்று கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை ராமேசுவரம் பங்குத் தந்தை சகாயராஜ் செய்து வருகிறார்.
இது குறித்து அவர் `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்காக 145 விசைப்படகுகள் அனுமதி பெறப்பட்டு, 4,880 பயணிகள் செல்ல பதிவு செய்துள்ளனர். ராமேசுவரம் மீனவர்கள் சார்பாக கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்பில் 35 அடி உயர கொடி மரம் வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது.
அந்தோனியார் ஆலயம் முன்பாக உள்ள கொடி மரத்தில் மார்ச் 11-ம் தேதி மாலை 5 மணியளவில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து சிலுவைப் பாதை திருப்பலி பூஜையும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இரவு அந்தோனியாரின் தேர் பவனி நடைபெறும்.
திருவிழாவின் 2-வது நாளான மார்ச் 12-ம் தேதி காலை 6 மணி அளவில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடத்தப்படும். அதன் பின்னர் தேர் பவனியும், அதை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும் என்றார்.
நன்றி : தி இந்து தமிழ்