பாலியல் வல்லுறவு வழக்கில் குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை – முழு விவரம்
2013ஆம் ஆண்டில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு குஜராத் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தில் 2013ஆம் ஆண்டு நடந்த பாலியல் சம்பவத்தில் 81 வயதான ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதாக அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குப்தா பிபிசியிடம் தெரிவித்தார்.
இதேவேளை இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஆசராமின் மனைவி உட்பட 6 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஆஜராகி வந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகர்@இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (சி) (பலாத்காரம்), 377 (இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள்) மற்றும் பிற விதிகளின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணை சட்டவிரோதமாக காவலில் வைத்ததாக சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபணமானதால் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆசாராமின் வழக்கறிஞர் சிபி குப்தா, “இது 2001 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்று கூறப்பட்டாலும் 2013இல் தான் புகார் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்று கூறினார்.
என்ன வழக்கு?
2013ஆம் ஆண்டு, குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆசாராம் பாபு மற்றும் 7 பேர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விசாரணையின் போது இறந்து விட்டார்.
இந்த வழக்கில் 2014ஆம் ஆண்டு ஜூலையில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். ஆமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை விவரத்தின்படி, 2001 மற்றும் 2006க்கு இடையில் ஆமதாபாத் நகரின் புறநகரில் உள்ள அவரது ஆசிரமத்தில் ஆசாராம் பலமுறை புகார்தாரரான பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி ஜோத்பூர் நீதிமன்றம், தன்னை ஒரு மத தலைவர் என்று அழைத்துக் கொண்ட ஆசாராம் பாபுவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மைனர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு ஆசாராம் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். மொத்தத்தில், கடந்த 10 ஆண்டுகளாக ஆசாராம் சிறையில் உள்ளார்.
ஆசாராம் யார்?
ஆசாராம் ஏப்ரல் 1941இல் இன்றைய பாகிஸ்தானின் சிந்து பகுதியில் உள்ள பெரானி கிராமத்தில் பிறந்தார்.
சிந்தி வணிக சமூகத்தைச் சேர்ந்த ஆசாராமின் குடும்பம், 1947இல் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் ஆமதாபாத் நகருக்கு குடிபெயர்ந்தது.
1972 ஆம் ஆண்டில், ஆசாராம் தனது முதல் ஆசிரமத்தை ஆமதாபாத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள முதேரா நகரில் சபர்மதி ஆற்றங்கரை பகுதியில் கட்டினார்.
இங்கிருந்து தொடங்கிய ஆசாராமின் ஆன்மிகத் திட்டம், குஜராத்தின் பிற நகரங்கள் வழியாக படிப்படியாக நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் விரிவடைந்தது.
ஆரம்பத்தில் குஜராத்தின் கிராமப்புறங்களில் இருந்து ஏழை, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின குழுக்களை தனது “சொற்பொழிவுகள், உள்நாட்டு மருந்துகள் மற்றும் பஜனை கீர்த்தனைகள்” மூலம் கவர்ந்த ஆசாராம், படிப்படியாக மாநிலத்தின் நகர்ப்புற நடுத்தர வர்க்கப் பகுதிகளிலும் வளரத் தொடங்கினார்.
ஆரம்ப ஆண்டுகளில், சொற்பொழிவுகளுக்குப் பிறகு பிரசாதம் என்ற பெயரில் விநியோகிக்கப்படும் இலவச உணவு ஆசராமின் ‘பக்தர்களின்’ எண்ணிக்கையை வேகமாக அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.
ஆசாராமின் அதிகாரபூர்வ வலைதளத்தின்படி, ஒரு காலத்தில் அவருக்கு உலகம் முழுவதும் 40 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
இந்த ஆதரவாளர்களின் பலத்தில், ஆசாராம், அவரது மகன் நாராயண் சாயுடன் சேர்ந்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 400 ஆசிரமங்களை உருவாக்கினார். ஆசாராமுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அவை தற்போது மத்திய வரித் துறை, அமலாக்க இயக்குநரகம் மற்றும் குஜராத் மாநிலத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
ஆசிரமம் கட்டுவதற்காக சட்டவிரோதமாக நிலத்தை அபகரித்த வழக்குகளும் அவற்றின் விசாரணையில் அடங்கும்.