
திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து அரிவாளை காட்டி பெண்களிடம் நகை, பணம் கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி திருச்செந்தூர் அருகேயுள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் யோவான்ராஜ் (33). இவருக்கு திருமணமாகி சுதாசெல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளன. யோவான்ராஜ் திருச்செந்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் வேலை பார்த்து வருகிறார். மேலும், வீட்டின் முன்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று தூத்துக்குடியில் இருந்து சுதாசெல்வியின் உறவுக்கார பெண்கள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். யோவான்ராஜ் நேற்றிரவு விடுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
வீட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் இன்று (06/05/2024) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் முகமூடி அணிந்து கொண்டு வீட்டின் கதவை உடைத்து வாள், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவுப் பெண்களின் கழுத்தில் ஆயுதங்களை வைத்து அணிந்திருந்த நகைள், வீட்டில் பீரோவில் இருந்த நகைகள் என 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து வீட்டிலிருந்த 3 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். செல்போன்களை எடுத்துச் சென்றதால் தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்து வந்த பெண்கள் திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரமாக சாலையில் நின்று உதவி கேட்டபோது சாலையில் வாகனத்தில் சென்ற ஒருவரும் உதவ முன் வராததால், சுதாசெல்வி வீட்டிலிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு திருச்செந்தூரில் விடுதிக்கு வேலைக்கு சென்ற கணவரிடம் நேரில் சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்த்ராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது