
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து எந்த துறையில், என்ன படிக்கலாம்? – மே 11ம் தேதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அழைப்பு
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மே 11ம் தேதி நடைபெறும் “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்பும் விடுத்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி வாழ்த்துகளை தெரிவித்ததுடன் வரும் 11.05.2024ம் தேதி நடைபெறவுள்ள “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்பும் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான 203 பள்ளிகளிலிருந்து 8155 மாணவர்களும், 10423 மாணவியர்களும் தேர்வு எழுதிய நிலையில், 7681 (94.19%) மாணவர்களும், 10227 (98.12%) மாணவியர்களும் மொத்தம் 17,908 (96.39%) மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள 56 அரசுப் பள்ளிகளிலிருந்து 1684 மாணவர்களும், 2906 மாணவியர்களும் தேர்வு எழுதிய நிலையில், 1504 (89.31%) மாணவர்களும், 2816 (96.90%) மாணவியர்களும் மொத்தம் 4320 (94.12%) மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதாவது தமிழ் பாடப்பிரிவில் 24 மாணவரும், வரலாறு பாடப்பிரிவில் 4 மாணவரும், கணிதம் பாடப்பிரிவில் 40 மாணவரும், இயற்பியல் பாடப்பிரிவில் 8 மாணவரும், பொருளாதாரம் பாடப்பிரிவில் 98 மாணவரும், வணிகவியல் பாடப்பிரிவில் 102 மாணவரும், வேதியியல் பாடப்பிரிவில் 3 மாணவரும், கணக்குப் பதிவியியல் பாடப்பிரிவில் 26 மாணவரும், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 125 மாணவரும், தாவரவியல் பாடப்பிரிவில் 2 மாணவரும், வேளாண் அறிவியல் பாடப்பிரிவில் 193 மாணவரும், 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மேலும், நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்கள் மனம்தளராது வருகின்ற ஜூன் மாதம் நடத்தப்படும் இடைத்தேர்வுக்கு விரைவாக விண்ணப்பித்து இடைத்தேர்வு எழுதி வெற்றி பெற்று உயர்கல்விக்கு விடாமுயற்சி எடுக்க வேண்டும். உமரிக்காடு, அரசு மேல்நிலைப்பள்ளி கொம்பன்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி செங்கோட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பூவாணி, தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 13 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி என்ற பெருமையை அடைந்துள்ளன.
மேலும், வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் அளிப்பதற்காக “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் மாணவர்களுக்கு உயர்கல்வியில் உள்ள பாடப்பிரிவுகள், வேலை வாய்ப்பை மேம்படுத்தும் வகையில் அளிக்கக்கூடிய கூடுதல் பயிற்சி விபரங்கள் பட்டயப் படிப்புகள், திறன் பயிற்சிகள் (skill training) பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள், நுழைவுத்தேர்வு, உதவித்தொகை, வங்கிகள் மூலம் கல்விக்கடன் உள்ளிட்ட பிற அத்தியாவசிய தகவல்களும் அளிக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்விக்கு பிறகு மாணவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையக்கூடிய வகையில் உயர்கல்வி படிப்புகளைத் தொடரச் செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
எனவே, 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்து அடுத்து எந்த துறையில் என்ன படிக்கலாம்? என்ற கேள்விகளுடன் உள்ள மாணவர்கள் தொடரக்கூடிய உயர்படிப்புகள் மற்றும் அடுத்தடுத்த வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகளும், சந்தேகங்களுக்கு உரிய தீர்வும் சம்பந்தப்பட்டத்துறை வல்லுநர்களால் அளிக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வருகின்ற மே 11ஆம் தேதி அன்று தூத்துக்குடியில் மாணிக்கம் மஹாலிலும், கோவில்பட்டியில் கே.ஆர்.நகரில் அமைந்துள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியிலும், கல்வி மாவட்டங்களுக்கு தனித்தனியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் உள்ள பாடப்பிரிவுகள் பற்றியும், கல்வி உதவித்தொகை (scholarship) மற்றும் வங்கிகள் மூலம் கல்விக்கடன் உதவி எவ்வாறு பெறுவது என்பது பற்றியும், வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைப்பார்கள்.
மேலும், உயர்கல்வி சேர்க்கையின்போது, தேவைப்படக்கூடிய சாதிச்சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட அத்தியாவசிய சான்றுகள் இதுவரை பெறவில்லை என்றால் இந்நிகழ்ச்சியின் போது பெறுவதற்கும் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி படிப்பு மேற்கொள்வது தொடர்பான சந்தேகங்களுக்கும் தேவைப்படும் சான்றுகளுக்கும் tut.kalloorikanavu2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும், 089259 21306 என்ற வாட்சப் எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆகையால், 12ஆம் வகுப்பு படித்து முடித்த அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.