
செவிலியர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் தகவல்
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தகுதியுள்ள செவிலியர்கள் தங்கள் விபரங்களை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் வழிகாட்டுதலின்படி வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய விரும்பும் தமிழகத்திலுள்ள தகுதியும் விருப்பமும் உள்ள செவிலியருக்கு உடனடியாக அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து வெளிநாட்டில் செவிலியர் பணியமர்த்த பல்வேறு நாடுகளில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.
தற்போது முதன்முறையாக வெளிநாட்டில் செவிலியர் பணிக்கு செல்ல விரும்பும் தகுதியுடைய செவிலியருக்கு அயல்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் மொழிகள் இலவசமாக பயிற்றுவிக்கப்பட இருக்கிறது. இந்நிறுவனம் மூலம் அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைக்கான பணிகள் குறித்த விபரங்களை இந்நிலைய வலைதளமான www.omcmanpower.tn.gov.in ல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. எனவே வெளிநாட்டில் வேலைசெய்ய விரும்பும் தகுதியுள்ள செவிலியர்கள் தங்கள் விபரங்களை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, கேட்டுக்கொண்டுள்ளார்.