Breaking News
சீமை கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம் நிறைவேற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதனை நிறைவேற்றத் தேவையான நிதியையும் அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை உட்பட 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இப்பணியை கண்காணிக்க மாவட்டத்துக்கு 5 பேர் வீதம் 65 வழக்கறிஞர்கள், ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.

சுற்றுச்சூழலுக்கும், விவ சாயத்துக்கும் மிகப்பெரிய எதிரியான சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் ஆணையிட்டதைத் அவற்றை அகற்றும் பணிகள் காவிரி பாசன மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் எந்த பயனையும் எதிர்பாராமல் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். இதனை நிறைவேற்றத் தேவையான நிதியையும் அரசு ஒதுக்க வேண்டும்” என்றனர். கூடவே, “மாநிலம் முழுவதும் 10 சதவீத சீமை கருவேல மரங்களே அகற்றப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் மட்டுமே நீதிமன்ற உத்தரவுபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

பல மாவட்டங்களின் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை” என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.நன்றி:தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.