கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை சீசனுக்காக தயாராகும் ரோஜாத் தோட்டம்
கொடைக்கானலில் கோடை சீசனுக்காக பிரையண்ட் பூங்காவிலுள்ள ரோஜாத் தோட்டத்தை தயார் செய்யும் பணியில் பூங்கா பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தற்போது மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட ரகங்களில் ஆயிரக்கணக்கான மலர்கள் பூத்து வருகின்றன. இந்நிலையில் இங்கு ரோஜாத் தோட்டம் தனியாக அமைக்கப்பட்டு அதில் 500-க்கும் மேற்பட்ட ரகங்களில் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ரோஜாச் செடிகளில் கவாத்து எடுக்கும் பணியை பூங்கா பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து மலர்ச் செடிகளுக்கு ஊற்றப்படுகிறது. மேலும் பனிப் பொழிவிலிருந்து மலர் நாற்றுகளை காப்பாற்ற நிழல் வலையும் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தோட்டக் கலை மேலாளர் பிரியதர்சன் கூறியது: கோடை விழாவுக்காக பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதலாக மலர் பாத்திகள் அமைக்கும் பணியும், தோட்டங்கள் அமைக்கும் பணியும் நடைபெறகின்றன. வரும் ஏப்ரல், மே மாதங்களில் கொடைக்கானல் சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இவை கவரும் என்றார்.