ஆறுமுகநேரியில் தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் – உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

ஆறுமுகநேரியில் தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் – உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் (பொ)  ஹரிஹரன், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி, காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் ஆகியோரது ஒருங்கிணைப்பில், காவல் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து, பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதன் தொடர்ச்சியாக, நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன்  உத்திரவின்படி, நேற்று (21.05.2024)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றியம் & காயல்பட்டிணம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் (பொ) செல்லப்பாண்டி மற்றும் கோவில்பட்டி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸூ ஆகியோர் அடங்கிய குழுவானது, ஆறுமுகநேரியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்று கூட்டாய்வு செய்தபோது, சிங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான டீ ஸ்டால், கோயில்ராஜ் என்பவருக்குச் சொந்தமான நிஷா கூல்டிரிங்க்ஸ் ஆகிய கடைகளில் தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிந்ததையடுத்து, இரண்டு கடைகளையும் மூடி சீல் வைக்க நியமன அலுவலர் உத்திவிட்டார். அதனையடுத்து, நிஷா கூல்டிரிங்க்ஸ் கடை மூடி சீலிடப்பட்டது. ஆனால், சிங்கராஜ் டீ ஸ்டாலை மூடி சீல் வைக்க உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முயற்சித்த போது, அக்கடையின் உரிமையாளரும், அவரது மகனும் அலுவலர்களை, கடையை மூடவிடாமல் தடுத்துள்ளனர்

. எனவே, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளருக்குத் தகவல் வழங்கப்பட்டு, அவரின் உத்திரவுபடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகைபுரிந்து, அவர்களின் உதவியுடன், சிங்கராஜ் டீ ஸ்டாலும் மூடி சீல் வைக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்த குற்றத்துடன், உணவு பாதுகாப்பு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காகவும், சிங்கராஜ் டீ ஸ்டால் உரிமையாளருக்கு எதிராக உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நிஷா கூல்டிரிங்க்ஸ் உரிமையாளரிடமும் விசாரணை செய்த பின்னர், உணவு பாதுகாப்புத் துறை சார்ந்த குற்றத்தை உறுதி செய்து, நியமன அலுவலரால் அபராதம் விதித்து உத்திரவிடப்படும். சம்பந்தப்பட்ட வணிகர் விதிக்கப்பட்ட அபராதத்தினை கருவூலத் துறையின் இணையதளம் மூலமாக செலுத்தி, அதற்கான சலான் நகலை நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னரே, கடைகள் மீண்டும் திறக்கப்படும். தவறினால், அபராதம் செலுத்தும் காலம் வரை கடைகள் மூடி, சீல் வைத்த நிலையிலேயே இருக்கும்.

காவல் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களின் ஆய்வின்போது, உணவு வணிகர்கள் எவரேனும் பான்மசாலா, குட்கா, பதப்படுத்தப்பட்ட மெல்லும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடையானது உடனடியாக மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்படுகின்றது. ஒரு பாக்கெட் இருந்தாலும் அக்கடை மூடி சீலிடப்படும் என்றும், இந்த விடயத்தில் எந்த வணிகருக்கும் கருணையோ அல்லது சலுகையோ காண்பிக்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனை குறித்தோ அல்லது அதை விற்கும் கடைகள் குறித்தோ புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையளத்தி்ற்கோ அல்லது TN Food Safety என்ற செயலிற்கோ அனுப்பலாம். புகாரைப் பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், புகார் அளிப்பவரது விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )