ஜெயலலிதா சொன்ன ரகசியம்: தோல் உரிக்கிறார் ‘நத்தம்’
”சசிகலா எனது வீட்டு வேலையாள்… ஆட்சிக்கு ஓ.பி.எஸ்., தான் என, ஜெயலலிதா எங்களிடம் கூறினார்,” என, அ.தி.மு.க., மாஜி அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
பன்னீர்செல்வம் அணி சார்பில் திண்டுக்கல்லில் நடந்த ஊழியர் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயப்படாத எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொண்டர்கள் பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். ‘கான்ட்ராக்ட்’ கிடைக்கும், ‘மில்’கள் நடத்தலாம் என, காரியம் சாதிக்க நினைப்போர், சசிகலா ‘பினாமி’களிடம் உள்ளனர். எம்.எல்.ஏ., க்களை ஆடுகளைப் போல அடைத்து, தலா 3 கோடி ரூபாய், 3 கிலோ தங்கத்தை காட்டி விலை பேசி விட்டனர். அந்த எம்.எல்.ஏ.,க்கள் மக்களிடம் பதில் கூறித்தான் ஆக வேண்டும்.
சசிகலா கும்பலுக்கு கப்பம் கட்ட முடியாமல் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் விரைவில் ஓ.பி.எஸ்., பக்கம் வருவர். ஜெ.,யின் சொத்துக்களையும், கட்சியையும் கைப்பற்ற, கடந்த சட்டசபை தேர்தலில் இருந்தே ‘மாபியா கும்பல்’ திட்டம் தீட்டியது. எம்.ஜி.ஆர்., கட்டிய அ.தி.மு.க., என்ற ‘பூமாலை’க்கு, ஜெயலலிதா அழகு சேர்த்தார். அந்த ‘பூ மாலை’ இன்று குரங்குகள் கையில் சிக்கி சின்ன பின்னமாகி வருகிறது. சசிகலாவால் தான் ஜெ.,க்கு அவப்பெயர் வந்தது.
சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றிய ஜெயலலிதா எங்களிடம், ”அவர் எனது வீட்டு வேலையாள்… அவ்வளவுதான். ஆட்சிக்கு ஓ.பி.எஸ்., தான்,” என்றார்.
மருத்துவமனையில் அவரை யாராவது பார்த்தால், அவர்களிடம் உண்மையை சொல்லி விடுவார் என்பதற்காகவே, யாரையும் சந்திக்க விடாமல் சசிகலா தடுத்தார்.அ.தி.மு.க., பொதுச் செயலரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், காலையில் மன்னிப்பு கடிதம் கொடுத்து, மாலையில் துணை பொது செயலர் ஆகியுள்ளார் தினகரன்; இவர்களின் தேர்வு செல்லாது. சசிகலா படத்துடன் அமைச்சர்கள் ஓட்டுக் கேட்டு சென்றால், அவர்களின் மனைவி கூட ஓட்டு போட மாட்டார்.
‘ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது மூன்றுவித சுவீட் கொடுத்து பேசினார்’ என, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். அவர், அரசியலில் காமெடி நடிகராக வலம் வருகிறார்; பல அமைச்சர்கள் ‘மகா நடிகர்கள்’. அமைச்சர் சீனிவாசன் தேர்தலில் நின்றால், மாநகராட்சி கவுன்சிலராக கூட வரமுடியாது. இவ்வாறு அவர் பேசினார்.