பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது: தமிழ் முதல்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி யுடன் கூறினர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வுக் கூடத்துக்குள் காலை 9.30 மணிக்கு சென்றுவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 8.30 மணி முதலே மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பள்ளிகளுக்கு வரத் தொடங்கினர்.
செல்போன் பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட பகுதி என்பதால், பள்ளி வளாகத்துக்குள் மாணவ, மாணவிகள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. துணைக்கு வந்திருந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரையும் வாழ்த்தும் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
பின்னர், பள்ளிகளில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தேர்வை தைரியமாகவும், நம் பிக்கையோடும் எழுதுமாறு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். காலை 9.30 மணிக்குள் அனைத்து மாண வர்களும் தேர்வுக் கூடத்துக்குச் சென்று, தங்களுக்கான இடங்களில் அமர்ந்தனர். சரியாக காலை 10 மணிக்கு அனைவருக்கும் வினாத்தாள் வழங்கப்பட்டது. வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், விடைத்தாள்களில் தேவையான விவரங்களைக் குறிப்பிடவும் 15 நிமிடம் அவகாசம் கொடுக்கப்பட்டது. 10.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர். பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.
தேர்வுக் கூடங்களில் காப்பி அடித்தல், பிட் அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை மாவட்டத்தில் 28,721 மாணவிகள் உள்பட 53,572 பேரும், தனித்தேர்வர்களாக 3,553 பேரும் தேர்வு எழுதினர். முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. மொழிப்பாடத்தின் கீழ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட 10 மொழிகளில் முதல்தாள் தேர்வு நடைபெற்றது.
சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் முதல்தாள் தேர்வு எழுதிய மாணவிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழ் முதல்தாள் தேர்வு எளிதாக இருந்தது. எதிர்பார்த்த கேள்விகள்தான் வந்தன. 2 மதிப்பெண் கேள்விகளில் ஒருசில கடினமாக இருந்தன. பாடத்திட்டத்தைத் தாண்டி எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை’’ என்றனர்.